Tuesday, April 23, 2013

தேங்காய்,இளநீர்


மனிதனின் உயரிய உணவுகளில் தேங்காயும் ஒன்று. நிறைய அன்பர்கள் தேங்காயால் கொலஸ்ட்ரால் கூடுவதாக எண்ணுகின்றனர். தேங்காயை சமைக்கும் போது முழுமை பெறாத கொழுப்பில் இருந்து முழுமைப் பெற்ற கொழுப்பாக மாறுகிறது. அதுவே கொலஸ்ட்ராலாக மாறுகிறது. ஆனால் சமைக்காத தேங்காய், தேங்காய் பால் மனிதர்களுக்கு மிகுந்த நன்மை புரிகிறது. நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுகிறது.
தேங்காயில் உள்ள சத்துக்கள்:
  1. நீர்=36%
  2. புரோட்டின்=4.5%
  3. கொழுப்பு=42%
  4. தாது உப்புக்கள்=1%
  5. நார்ச்சத்து=3.6%
  6. மாவுப்பொருள்=13%
  7. கால்சியம்=10 யூனிட்
  8. பாஸ்பரஸ்=240 யூனிட்
  9. இரும்பு=1.7 யூனிட்
இவை அனைத்தும் 100 கிராம் தேங்காய் பாலில் உள்ள சத்துகள்.
மருத்துவக் குணங்கள்:
  1. தென்னையின் வேரிலிருந்து குருத்து வரை எல்லாப் பாகங்களிலும் மருத்துவக் குணங்கள் கொட்டிக் கிடப்பதாகச் சொல்கிறது சித்த மருத்துவம். தேங்காய், தேங்காய் எண்ணெய் உடல் நலத்துக்குக் கேடு என்ற பிரசாரம் தேங்காய் எண்ணெய் மீது சுமத்தப்பட்டிருக்கும் அவதூறு என்கிறார்கள் நமது பாரம்பரிய மருத்துவர்கள்.
  2. தேங்காய், தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று. விருந்து, விழாக்கள், பண்டிகைகள், சடங்குகள் என எல்லா இடத்திலும் தேங்காய்க்கு முதல் மரியாதைதான். தேங்காய், மங்களகரத்தின் அடையாளச் சின்னம் மட்டுமல்ல: மருத்துவத்தின் அடையாளச் சின்னமும்கூட என்கிறது சித்த மருத்தவம்.
  3. இந்தியாவுக்கு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னை வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் வயது 80 ஆண்டுகள் முதல் 200 ஆண்டுகள் வரை.
  4. விதை வளர்த்து மரமான பின் விதைத்தவனுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கிறது என்பதால் இதை “தென்னம்பிள்ளை” என்று அழைக்கிறார்கள்.
  5. புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன. தேங்காய்ப் பால் உடல் வலிமைக்கு நல்லது.
  6. தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.
  7. தேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஓடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது. மூல முளை, ரத்த மூலம் போன்றவற்றுக்கு தென்னங்குருத்திலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது. தேங்காய் பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது. சேராங் கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்குத் தேங்காய்ப் பால் நஞ்சு முறிவு. தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களுக்கு அருமருந்து.
  8. தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துகின்றன. நாள்பட்ட தீராத புண்களுக்கு மருந்தாகத் தரப்படும் மத்தம் தைலம், தோல் நோய்களுக்கான கரப்பான் தைலம், வாத வலிகளைக் குணப்படுத்தும் கற்பூராதி தைலம், தலைக்குப் பயன்படுத்தப்படும் நீலபிரிங்காதித் தைலம், சோரியாசிஸ் நோய்க்குப் பயன்படும் வெப்பாலைத் தைலம், தலையில் உள்ள பொடுகுக்கு மருந்தாகும் பொடுதலைத் தைலம் ஆகிய தைலங்களில் தேங்காய் எண்ணெய்யின் பங்கு முக்கியமானது.
  9. தேங்காய்ப் பாலை விளக்கெண்ணெய்யில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அப்புறப்படுத்தும்.
  10. தேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு தேங்காய்ப் பால் மிகவும் சிறந்தது. உடலுக்குத் தேவையான அமீனோ அமிலங்கள் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.
  11. மீடியம் செயின் பேட்டி (Medium Chain Fatty Acid) ஆசிட் தேங்காயில் அதிகமாக உள்ளது. உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கும் காப்ரிக் ஆசிட் (Capric Acid) மற்றும் லாரிக் ஆசிட் (Lauric Acid) ஆகிய இரண்டு அமிலங்களும் தேங்காயில் போதிய அளவு உள்ளன.
  12. இதனால் தேங்காய் எண்ணெய் உரிய அளவு தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும் என்று அண்மைக் கால ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளன. தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது.
  13. தேங்காயில் உள்ள மோனோ லாரின் (Mono Laurin) வைரஸ் செல் சுவர்களைக் கரைக்கிறது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வைரல் லோடைக் குறைக்கிறது. தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு (Metabolism) பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் சக்தியை அதிகப்படுத்துகிறது.
  14. குழந்தைகள் நல்ல நிறமாக பிறக்க வேண்டும் என்பதற்காக குங்குமப்பூ சாப்பிடுவது வழக்கம். அதுபோல் குழந்தை நல்ல நிறமாகப் பிறக்க தேங்காய்ப் பூவை சாறாக்கி கர்ப்பிணிகளுக்குக் கொடுக்கும் வழக்கமும் உள்ளது.
  15. சுத்தமான சுவையான பானம். இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன. இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும். ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
  16. சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும். மேக நோய்களைக் குணப்படுத்தும். ஜீரணக் கோளாறால் அவதிப் படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. உடலில் ஏற்படும் நீர் – உப்புப் பற்றாக்குறையை இளநீர் சரி செய்கிறது.
  17. இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்ல சத்து. ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன. அவசர நிலையில் நோயாளிகளுக்கு இளநீரை சிரை (Vein) மூலம் செலுத்தலாம். இளநீர் மிக மிகச் சுத்தமானது.
  18. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருள்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது. இளநீரிலிருந்து தயாரிக்கப்படும் “ஜெல்” என்ற பொருள் கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து. இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன.
  19. சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன. பொட்டா ஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது.
  20. இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிட வேண்டும்.
  21. சளி, இருமல், ஆஸ்துமா அன்பர்களுக்கு அற்புத பானம்.
  22. மலச்சிக்கல், விலகும். குடல் பூச்சிகள் நீக்கும்.
  23. புற்று நோயை குணப்படுத்தும் உணவு. புலால் உணவை விட உயர்ந்த சக்தி, அதிக சக்தி தரும் உணவு.
  24. தளராத மன உறுதிக்கு இனிப்புடன் தேங்காய் பால் தினமும் சுவைத்திடுவோம்.

குறிப்பு:
  • தேங்காய் அல்லது தேங்காய் பாலுடன் இனிப்புக் கலந்து சாப்பிட வேண்டும். தனியாகச் சாப்பிடக் கூடாது. கனிகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.
  • தேங்காய் பாலை எல்லா இயற்கைச் சாறுகளுடனும் இணைத்தும் சாப்பிடலாம்.

இளநீர்


பெற்ற பிள்ளை கவனிக்கா விடினும் தென்னை தினமும் பசி நீக்கும். எல்லாவற்றையும் தரும் மரமாக இருக்கும் தென்னையை கற்பக விருட்சம் என்கின்றனர். தேங்கனி, தேங்காய், தாழை, தெங்கு, தென்னை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. மாதர்கனி, முக்கனி, இரசபலம், சுராகாரம், பானி விருக்கம் என பல பெயர்களால் பாராட்டப்படுகிறது.
  • எல்லா இட‌ங்களிலும் எல்லா காலங்களிலும் கிடைக்கிறது. இளநீர் ஒரு அருமையான இயற்கை பானம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடலாம்.குளிர்ச்சியும் சத்தும் மிகுந்த பானம். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்கும். இளநீர் உருவாகி ஓரிரு மாதங்களில் இருந்து பயன்படுத்தலாம்.
  • தென்னையில் தேங்காய் உருவாகி முழுமையடைய பத்து மாதங்கள் ஆகின்றன. மனித கருவின் முழு வளர்ச்சிக் காலமும் பத்து மாதங்கள்.
  • மேலும் பிற பழங்களை முற்றாத போது காயாக இயற்கையாக சாப்பிட இயலாது. ஆனால் தென்னையில் தேங்காய் உருவான பின் ஒரு சில மாதங்களில் இளநீராகவும், பின் வழுக்கையாகவும், தேங்காய் கொப்பரையாகவும் எப்போதும் பயன்படுத்தும் வகையில் இயற்கையின் ஒரு அற்புத சிருஷ்டி இது.
  • இளநீர் இனிப்பும், தேவையான இயற்கை உப்புச் சத்துக்களும் கலந்த அற்புத பானம்.
இளநீரில் உள்ள சத்துக்கள்:
  1. நீர்=95%
  2. பொட்டாசியம்=310 மி.கிராம்
  3. குளோரின்=180 மி.கிராம்
  4. சோடியம்=100 மி.கிராம்
  5. கால்சியம்=30 மி.கிராம்
  6. மக்னீசியம்=30 மி.கிராம்
  7. பாஸ்பரஸ்=37 மி.கிராம்
  8. சல்ஃபர்=25 மி.கிராம்
  9. இரும்பு=0.15 மி.கிராம்
  10. காப்பர்=0.15 மி.கிராம்
  11. வைட்டமின் B=20 மி.கிராம்
இவை அனைத்தும் 100 கிராம் இளநீரில்  உள்ள சத்துகள்.
மருத்துவக் குணங்கள்:
  • சிறுநீரகப் பணிகள், சிறுநீரகக் கற்கள் கரையப் பயன்படுகிறது.
  • காலராவுக்கு அற்புத மருந்து.
  • உடம்பில் நீர் சத்து குறையும் போது இளநீர் டானீக்காக வேலை செய்கிறது.
  • விரைவில் ஜீரணம், உடல் சூடு, மூலச்சூடு, மூலம் விலகும்.
  • உடல் பருமன், இரத்த அழுத்த அன்பர்கள் இளநீரால் நல்ல பலன் அடைவர்.
  • பொட்டாசியம் உப்பு மிகுந்து உள்ளது. வைட்டமின் B இதயம், நரம்புகள், ஜீரண உறுப்புகளைப் பாதுகாக்கிறது.
  • தள்ளாத வயதிலும் இளநீர் புத்துணர்ச்சி தந்திடும்.


No comments: