Friday, June 21, 2013

சர்க்கரையை கரைக்கும் வெந்தயம்

''தெனமும் வெந்தயத்தை ஊறவெச்ச மோரைக் குடி... காரத்தைக் கண்ணுலகூட பார்க்காத. நீ சாதத்தை மட்டும் ஆக்கிக்கோ. ஒருவாரத்துக்குக் கீரை, கொளம்பு, பொரியலை நான் கொடுத்தனுப்பறேன்.'' அம்மணி சொல்ல, வாசம்பாவும் தன் பங்குக்குப் பேசினாள்.
''வாதத்துக்குகூட மருந்துண்டு, பிடிவாதத்துக்கு மருந்தே இல்ல. நல்லபடியா உடம்பு தேறினதும், உன் பிடிவாதத்தை விட்டுப்புட்டு, புள்ளைகளோட போய்ச் சேர்... அதுதான் உனக்கு நல்லது'' என்ற வாசம்பா, அம்மணி பக்கம் திரும்பினாள்.

''வெந்தயக்கீரை அத்தனை குளிர்ச்சியா அம்மணி?''
''ஆமா வாசம்பா... வாரத்துக்கு மூணு நாள் வெந்தயக்கீரையைச் சமைச்சு சாப்பிட்டாப் போதும். உஷ்ணத்துனால ஏற்படுற வயிற்றுவலி சரியாயிடும். குடிப் பழக்கத்துனால பாதிக்கப்படற கல்லீரல்கூட பலப்படும்.
பத்து கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்து கொஞ்சம் சோம்பும் உப்பும் சேர்த்து அரைச்சு மோர்ல கரைச்சுக் கொடுக்க வயித்துப்போக்கும் குணமாயிரும்.''  
''வெந்தயத்துக்கு இத்தனை மகத்துவமா?''
''ராத்திரியில கொஞ்சம் வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீர்ல ஊறவெச்சு, அந்தத் தண்ணியை காலையில வெறும் வயித்துல குடிச்சிட்டு வந்தா, சர்க்கரை நோயோட வீரியம் குறையும்டி.''
''அடிக்கிற வெயிலுக்கு கண்ட இடத்துல கட்டி வந்து அவஸ்தைப்படுதுங்களே... அதுக்கு வெந்தயத்துல வைத்தியம் இருக்கா அம்மணி''
''வெந்தயத்துக்கூட சமஅளவு சீமையத்திப் பழத்தைச் சேர்த்து அரைச்சு, நீர்ல குழைச்சுத் தணல்ல களி போல கிண்டி, கட்டி மேல வெச்சுக் கட்டினா, நல்லாப் பழுத்து உடைச்சிடும்.''
''அடேடே...''
''அது மட்டுமா, வெந்தயத்தை ஊற வெச்சு அரைச்சு, பரு வந்த இடத்துல பூசினா உடனே சரியாயிரும். தலைக்குச் சீயக்காய் அரைக்கிறப்ப, வெந்தயத்தைச் சேர்த்து அரைச்சுத் தேய்ச்சுக் குளிச்சா, உடம்புக்கும் குளிர்ச்சி. முடியும் நல்லா வளரும்.''  
''நம்ம பார்வதிக்குப் பொம்பளப் புள்ள பொறந்திருக்கு... ஆனா, தாய்ப்பாலே இல்லியாம்... என்னாடி பண்ணுறது?''
''தாய்பால் வராத தாய்மாருங்க, அஞ்சு கிராம் வெந்தயத்தை நல்லா வேகவெச்சி, கடைஞ்சிக்கணும். இதுகூடத் தேனைக் கலந்து சாப்பிட்டுவந்தா, தாய்பால் நல்லா சுரக்கும்.’
பேசிக்கொண்டே வந்த அம்மணி சுடலைமுத்து தோட்டத்தில் பசுங்காடாக இருந்த கறிவேப்பிலைச் செடிகளைப் பார்த்ததும் வாசனையும் யோசனையுமாக வாசம்பாவை அருகே அழைத்தாள் அம்மணி. அப்புறம் என்ன... கறிவேப்பிலை  கச்சேரிதான்!
- பாட்டிகள் பேசுவார்கள்...

No comments: