நம் ஊரைப் பொருத்தவரை, எப்போதுமே வெயில், வெயில், வெயில்தான். மழைக் காலம், குளிர் காலம் என்று இருந்தாலும் காலநிலை மாறி, வருடத்தின் முக்கால்வாசி நாட்கள் வெப்பத்திலும், புழுக்கத்திலும் கழிகின்றன. அதனால், குளிரும் பனியும் நமக்கு ஒரு சுகமான காலம். பனிக் காலம் தொடங்கிவிட்டது. காலையில் சில்லிடும் பனிக் காற்றால், இரவு வரை வீடே ஒருவித ஈரப்பதத்துடன் இருக்கும். குளிர்காலம் என்பது நமக்கு மட்டுமல்ல, கிருமிகளுக்கும் கொண்டாட்டமான காலம்தான். இந்த இதமான தட்ப வெப்பநிலை, கிருமிகள் செழித்து வளர உதவும். விளைவு, சாதாரண ஜலதோஷம் தும்மலில் தொடங்கி, காய்ச்சல், சுவாசப் பிரச்னை என ஆரோக்கியம் கெடுவதுடன், நம்மை ஒரேயடியாக முடக்கிப்போட்டுவிடும். அதிலும், ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்னை உள்ளவர்களுக்கு, 'பனிக் காலம்’ என்பதே பரிதாபத்துக்குரிய காலம்தான்! உடலின் நீர்ச் சத்தும் சருமத்தின் எண்ணெய்ப்பசையும் குறைவதால், சருமமும் வறண்டு, தோல் சுருங்கி, பொலிவிழந்துபோகும்.
தனிக் கவனமும் முன்னெச்சரிக்கையும் இருந்தால், இந்தப் பனிக் காலத்தையும், பிணியின்றிக் கடந்துவிடலாம். உடலைக் கதகதப்பாக வைத்துக்கொள்வதும், உடலுக்கு உஷ்ணம் தரும் உணவுகளை எடுத்துக்கொள்வதும், சருமத்தை வறண்டுபோகாமல் பார்த்துக்கொள்வதும்தான் குளிர் காலத்தில் கவனிக்க வேண்டிய முக்கியமான மூன்று விஷயங்கள். உடலைப் பாதுகாக்கும் குறிப்புகளை, மூத்த பொதுமருத்துவர் எஸ். சேதுராமனும், குளிர்காலத்துக்கு ஏற்ற உணவுக் குறிப்புகளை, சித்த மருத்துவர் டாக்டர் பத்மபிரியாவும், சருமத்துக்கான இயற்கை அழகுக் குறிப்புகளை அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளியும் வழங்கியிருக்கிறார்கள்.
இனி, பனிக் காலம் புத்துணர்ச்சி, பொலிவுடன் அமைய வாழ்த்துக்கள்!
''குளிர் காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது, பச்சிளம் குழந்தைகளும் முதியோர்களும்தான். அவர்களைத்தான், முதலில் கவனத்துடன் பாதுகாக்க வேண்டும்'' என்கிறார் திருச்சியைச் சேர்ந்த மூத்த பொதுநல மருத்துவர் எஸ்.சேதுராமன்.
பனிக் காலப் பிரச்னைகளும் தீர்வும்...
முதியோர்
பனிக் காலத்தில் எல்லோருக்குமான பிரச்னை வறண்டுபோகும் சருமம்தான். கை, கால்களில் சருமம் வறண்டுபோய், வெள்ளை வெள்ளையாக இருக்கும். உதடுகள், பாதங்கள்கூட வெடிக்கும். கைக்குழந்தைக்கும் கூட பாதிப்பு இருக்கும். எனவே, குழந்தை முதல் பெரியோர் வரை, பனிக் காலத்தில் சருமத்தை எப்படிப் பராமரிக்க வேண்டும் என்று விவரிக்கிறார் இயற்கை அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி.
சருமப் பாதுகாப்பு
குழந்தைகள்:
ஒரு வயது வரையுள்ள குழந்தைகளுக்கு, தலையில் (ஸ்கால்ப்) உள்பகுதியில் அடை அடையாக இருக்கும். பனிக் காலத்தில் இது மேலும் அதிகரிக்கலாம். இதனால் அரிப்பு, நமைச்சல் தாங்காமல் குழந்தை அழுதுகொண்டே இருக்கும். சில குழந்தைகளுக்கு, புருவம், முதுகு மற்றும் முடியிலும் வெள்ளைநிறப் பொடி போல் ஒட்டியிருக்கும். இதைப் போக்க...
பயத்தம்பருப்பு, வெந்தயம், கடலைப்பருப்பு மூன்றையும் சமஅளவு எடுத்து, சுத்தம் செய்து கொள்ளுங்கள். பிறகு வெயிலில் நன்கு காயவைத்து, மிஷினில் பட்டுப்போல அரைத்துக்கொள்ள வேண்டும். இதை சலித்து, காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.
குழந்தைகளுக்கு, ஒருநாள் விட்டு ஒருநாள், உச்சி முதல் பாதம் வரை இந்தப் பொடியைக் குழைத்து, நன்றாகத் தேய்த்துக் குளிப்பாட்டி, மிருதுவான துவாலையால் துடைக்க வேண்டும். இதனால், குழந்தை, எந்தச் சருமப் பாதிப்பும் இன்றி புத்துணர்ச்சியாக இருக்கும்.
ஆலிவ் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயைக் கால்களில், முட்டி முதல் பாதம் வரை நன்றாகத் தடவி 10 நிமிடங்கள் ஊறவிடவும். பிறகு, சோப் போட்டுக் குளிப்பாட்டி, மெல்லிய துணியால் துடைக்க வேண்டும். அரிப்பு, சொறி போவதுடன், கறுமையும் மறைந்து சருமத்தின் இயற்கை நிறத்தைத் தரும்.
டீன் ஏஜ்
இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெயில் அரை டீஸ்பூன் மிளகு போட்டுக் காய்ச்சி இறக்கவும். எண்ணெய் இளஞ்சூடாக இருக்கும்போதே, தலையில் தடவி, நன்றாக வாரிக்கொள்ள வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து, ஒரு டீஸ்பூன் கடலை மாவு, ஒரு டீஸ்பூன் வெந்தயத்தூள் போட்டுக் கரைத்து, தலையில் லேசாகத் தேய்த்து நன்றாக அலசிக் குளிக்க வேண்டும்.
இதைப்போக்க... ஏடுடன் இருக்கும் பாலில், ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெயை விட்டு, கரண்டி அல்லது 'விப்பர்’ கொண்டு நன்றாக அடித்துக்கொள்ள வேண்டும். இந்தக் கலவையைக் கை, கால்கள், கழுத்து என எல்லா இடங்களிலும் தடவி வைத்திருந்து, சாதாரண சோப் போட்டுக் குளிக்க வேண்டும்.
நடுத்தர வயதினர் (30 முதல் 60)
60 வயதுக்கு மேல்
குளிர் காலத்தில் நம் உணவு எப்படி இருக்க வேண்டும், நம் ஆரோக்கியம் தொடர்பாக நாம் மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து விவரிக்கிறார் சென்னை 'பாரம்பரிய மருத்துவ மற்றும் ஆராய்ச்சி மையம்’ சித்த மருத்துவர் பத்மபிரியா.
பனிக் கால உணவும்... ஆரோக்கியமும்
''குளிர் காலம், நோய்த்தடுப்பு சக்தியை அதிகரிக்கும் காலம். ஆடி மாதத்துக்குப் பிறகு வருவது தட்சிணாயன காலம். அதாவது, வளர்ச்சிக்கான காலம். அதுபோல நம் உடலிலும் நோய்த்தடுப்பு சக்தி கூடியிருக்கும். சித்த மருத்துவத்தில், 'ஜீரண நெருப்பு’ என்று அழைக்கப்படும் செரிமான சக்தியும் குளிர் காலத்தில் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் செரிமான சக்தியும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. நல்ல செரிமான சக்தி இருப்பவர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருக்கும்.
நமது தமிழ் மரபுப்படி, நல்ல விருந்து அல்லது பலமான உணவுகளுடன் தொடர்புடைய பண்டிகைகள் எல்லாமே, குளிர் காலத்தில்தான் வரும். நவராத்திரியில் தொடங்கி, தீபாவளி, கார்த்திகை, பொங்கல் என, குளிர் காலத்தில் வரும் எல்லாப் பண்டிகைகளிலுமே வயிற்றுக்கு பலமான விருந்து இருக்கும். மார்கழியில் பார்த்தால், அதிகாலையிலேயே கோயில்களில் பொங்கல், சுண்டல் என பிரசாதங்கள் விநியோகம் இருக்கும். இப்படி எல்லாமே நம் உடலில் அந்த நேரத்தில் ஜீரண சக்தி அதிகம் இருப்பதால் அதற்கேற்ப நம் மரபில் வழிவழியாக வந்த வழக்கங்கள்தான். இந்தப் பருவ காலத்தில், சுற்றுப்புறம் மிகவும் குளிராக இருப்பதால், நம் உடல் தானாகவே ஒரு கதகதப்பை உருவாக்கிக்கொள்ளும். முதியவர்களுக்கு மட்டும் இது கொஞ்சம் சிரமம் தரும் பருவமாக இருக்கும்.
உடலில் உள்ள வறட்சி போக, நல்லெண்ணெய் தேய்த்தும் குளிக்கலாம். மிதமான வெயில் அடிக்கும்போது, நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்யலாம். உடல் நன்கு புத்துணர்ச்சி அடைந்து, சுறுசுறுப்பாகும். சிலருக்குப் பாதங்களில் வெடிப்பு ஏற்படும். இவர்கள், விளக்கெண்ணெயில் மஞ்சள்தூள் கலந்து பாதத்தில் வெடிப்பு உள்ள இடத்தில் தடவி வந்தால், குணம் தெரியும். நாட்டு மருந்துக் கடையில் குங்கிலிய வெண்ணெய் என்ற மருந்து கிடைக்கும். அதை வாங்கித் தடவினாலும் நல்ல பலன் தெரியும்.
குளிர் கால உணவுக் குறிப்புகள்:
பொதுவான பராமரிப்புக் குறிப்புகள்:
மூட்டு பிரச்னைக்கு இஞ்சி கஷாயம்
ஒரு துண்டு இஞ்சியைக் கழுவி, தோல் சீவி, தண்ணீர் சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து, தெளியவிடவும். பிறகு, வடிகட்டி, லேசாகச் சுடவைத்து, தேன் சேர்த்து அருந்தினால், குளிரில் வரும் மூட்டுப் பிடிப்புகள், மூட்டு வலி ஆகியவை குணமாகும்.
செரிமானக் கோளாறு நீங்க:
அதிமதுரம் 10 கிராம், சித்திரத்தை 10 கிராம், சுக்கு 5 கிராம், கிராம்பு 2, ஏலக்காய் 2 இவற்றை நன்றாகப் பொடித்துக்கொள்ளவும். இதில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து, 3 நிமிடங்கள் கொதிக்க வைத்து, வடிகட்டி, சிறிது பனங்கல்கண்டு, ஒரு ஸ்பூன் தேன் சேர்த்துக் கலந்து அருந்தலாம். குளிர் காலத்தில் இருமல், ஜலதோஷம் எதுவும் வராது. செரிமானத்துக்கும் நல்லது.
டான்சில்ஸ் தொல்லைக்கு:
சிறு குழந்தைகளுக்கு டான்சில்ஸ் இருந்தால், தொண்டை வலி இருக்கும். 'பூண்டுத் தேன்’ சிறந்த கைமருந்து. பூண்டில் 'கந்தகம்’ உள்ளது. மேலும் இது சிறந்த 'ஆன்டிபாக்டீரியல்’ மற்றும் 'ஆன்டி மைக்ரோபியல்’ பொருளும் கூட.
நாலைந்து பூண்டுப் பல்லை அரைத்து, துணியில் போட்டு, தீயில் காட்டினால் 2, 3 சொட்டு சாறு இறங்கும். இதனுடன் 2, 3 சொட்டுகள் தேன் கலந்து குழைத்து, குழந்தையின் தொண்டையில் தொடர்ந்து தடவி வரவேண்டும். தொண்டைக்கட்டு, தொண்டைவலி எல்லாமே சரியாகும். பெரிய குழந்தைகளுக்கு, பூண்டுப்பற்களை வதக்கி, தேன் சேர்த்துச் சாப்பிடக் கொடுக்கலாம்.
ஆஸ்துமா பிரச்னையைக் குறைக்க:
சுலபமாகச் செரிக்கும் உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். இரவு உணவை சீக்கிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
திப்பிலிப்பொடியை வாங்கிவைத்துக்கொண்டு, அதில் அரை டீஸ்பூன் எடுத்து, தேனில் குழைத்து, தினமும் 2 வேளை சாப்பிட்டால், ஆஸ்துமா தொந்தரவிலிருந்து தப்பிக்கலாம்.
பனிக் காலத்தில் நம் உணவையும் கொஞ்சம் மாற்றி, உடலை உஷ்ணப்படுத்தும் உணவுகளாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
டாக்டர் பத்மபிரியா வழங்கும்
குளிர் கால 'சூடான’ விருந்து இதோ...!
கொள்ளு பொங்கல்
பச்சரிசி ஒரு கப் என்றால் கால் கப் கொள்ளு எடுத்து வறுத்துக்கொள்ள வேண்டும். அரிசி, கொள்ளு, உப்பு, சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து தேவையான தண்ணீர்விட்டு, குக்கரில் வைத்து, குழைய வேகவிட்டு எடுக்கவும். ஒரு ஸ்பூன் நெய்யில் சிறிது மிளகு, சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை தாளித்து பொங்கலில் சேர்த்துச் சுடச்சுட சாப்பிட வேண்டும். விருப்பப்பட்டால், முந்திரியை நெய்யில் வறுத்துக் கொட்டிக் கலந்துகொள்ளலாம்.
கொள்ளு சூப்
ஒரு கைப்பிடி கொள்ளை நான்கைந்து மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஊறவைத்து, குக்கரில் தண்ணீர் சேர்த்து, குழைய வேகவைக்கவும். அரை ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம் இவற்றைப் பொடிக்கவும். வெங்காயம், சிறிய தக்காளி தலா ஒன்று எடுத்து நறுக்கிக்கொள்ளவும். இவற்றுடன் நசுக்கிய நாலைந்து பூண்டை, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாகச்சேர்த்து நன்கு மசித்துவிட வேண்டும். இதில் தேவையான தண்ணீர் சேர்த்து, மீண்டும் கொதிக்கவைத்து இறக்கி, பச்சைக் கொத்துமல்லி, கறிவேப்பிலை கிள்ளிப்போட்டு, மேலாக ஒரு ஸ்பூன் நெய்விட்டு, அருந்த வேண்டும்.
கொள்ளு உடலுக்கு உஷ்ணம் தரும். கொழுப்பைக் கரைக்கும் குணம்கொண்டது. ஆஸ்துமா, சளி, இருமல், காய்ச்சல் இருப்பவர்களுக்கு நல்லது.
மிளகுக் குழம்பு
மிளகு, வெந்தயம் தலா ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு தலா ஒரு டேபிள்ஸ்பூன், ஒரு கைப்பிடி கறிவேப்பிலை இவை எல்லாவற்றையும் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயில் வறுத்து, கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். நெல்லிக்காய் அளவு புளியைக் கரைத்துவைக்கவும். நல்லெண்ணெயில் கடுகு, சீரகம் போட்டுத் தாளித்து, தேவைப்பட்டால் சிறிது பூண்டு போட்டு வதக்கி, புளித்தண்ணீரை ஊற்றிக் கொதிக்கவிடவும். கொதிக்கும்போது அரைத்துவைத்திருக்கும் பொடியைப்போட்டு, குழம்பு வற்றி வந்ததும், ஒரு துண்டு வெல்லம் சேர்த்து இறக்கவும்.
சூடான சாதத்தில் போட்டுப்பிசைந்து சாப்பிட்டால், சளி, காய்ச்சல் சட்டென மறையும்.
தனியாப்பொடி
100 கிராம் தனியா, 25 கிராம் சிவப்பு மிளகாய், கிராம்பு 4 அல்லது 5, பட்டை ஒரு துண்டு, தேவைக்கேற்ப உப்பு, சீரகம் ஒரு டீஸ்பூன், மஞ்சள் ஒரு சிறிய துண்டு இவை எல்லாவற்றையும் சிறிது நல்லெண்ணெய் விட்டு, தனித்தனியாக வறுத்து, ஆறியதும் உப்பு சேர்த்து அரைத்துவைத்துக்கொள்ளவும். சூடான சாதத்தில் நெய் அல்லது எண்ணெய் விட்டு, இந்தப் பொடியைப்போட்டுப் பிசைந்து சாப்பிடலாம்.
செரிமானக் கோளாறுகள் சரியாகும். உடம்புக்கு சூடு தரக்கூடியது. சளி, காய்ச்சல், ஜலதோஷம் இருப்பவர்களுக்கு, வாய்க்கும் வயிற்றுக்கும் நல்ல உணவு.
கண்டதிப்பிலி ரசம்
10 முதல் 20 கிராம் கண்டதிப்பிலி (நாட்டுமருந்துக் கடையில் கிடைக்கும்), மிளகு, துவரம்பருப்பு, தலா அரை டீஸ்பூன், ஒரு டீஸ்பூன் சீரகம், 2 காய்ந்த மிளகாய், புளி பெரிய நெல்லிக்காய் அளவு.
புளியைக் கரைத்துவைக்கவும். கண்டதிப்பிலி, துவரம்பருப்பு, சீரகம், மிளகு, துவரம்பருப்பு, மிளகாய் ஆகியவற்றை வறுத்து, ஆறவைத்து கொரகொரப்பாக அரைத்து, புளித்தண்ணீரில் போட்டுக் கரைத்துக் கொதிக்கவைக்கவும். நன்கு கொதித்ததும் அடுப்பை சிம்மில் வைத்து, உப்பு, கொத்துமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
சூடாகக் குடிக்கலாம். சாதத்தில் ஊற்றியும் சாப்பிடலாம்.
உடம்புவலி, காய்ச்சல், மூட்டுவலி, ஜலதோஷம் எல்லாவற்றுக்கும் சிறந்த நிவாரணி.
முடக்கத்தான் தோசை
ஒரு கப் முடக்கத்தான் கீரையைக் கழுவி, நன்கு மைய அரைத்துக்கொள்ளவும். 2 கப் அரிசியை ஊறவைத்து உப்பு, ஒரு ஸ்பூன் வெந்தயம்சேர்த்து அரைக்கவும். காரம் தேவைப்பட்டால் அரைக்கும்போது 10 மிளகு சேர்த்து அரைக்கலாம். அரிசி மாவுடன், அரைத்த கீரை விழுதைச் சேர்த்துக் கலந்து, அரை மணி நேரம் வைத்திருந்து தோசையாக ஊற்றி, சட்னியுடன் சாப்பிடலாம்.
மூட்டுவலி, முழங்கால்வலி, உடம்புவலி என எல்லா வலிகளையும் போக்கும் அற்புதமான உணவு இது.
இஞ்சித் தொக்கு
சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி என எல்லாவற்றுக்கும் தொட்டுக்கொள்ளலாம்.
இந்தக் குளிருக்கு இதமான உணவு இஞ்சி. அஜீரணம், வலிகளைப் போக்கக்கூடியது. ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். சளி, இருமல், ஜலதோஷம் இருப்பவர்களுக்கு கைகண்ட மருந்து.
No comments:
Post a Comment