Tuesday, November 5, 2013

தினமும் கால்களை சுத்தம் செய்கிறீர்களா?

கால்களில் வலி ஏற்பட்டால், அலட்சியமாக இருந்து விடாதீர்கள். வலி தொடர்ந்து இருந்தால், மருத்துவரை அணுகுவது நல்லது. பாதங்களின் வண்ணம் மாறுகிறதா, தட்ப வெப்பம் எப்படியிருக்கிறது, பாதங்களில் வெடிப்பு, கீறல் இருக்கிறதா, உள்ளங்கால்களில் தோல் உரிகிறதா என்று, அடிக்கடி கவனித்து கொள்ள வேண்டும். 
கொப்புளம், சேற்றுப்புண் இருந்தால், சாதாரணமாக விட்டுவிடக் கூடாது. கால்களை தினமும் சுத்தம் செய்வதுடன், கால் விரல்களின் நடுவில் நன்கு தேய்த்து கழுவ வேண்டும். கால் நகங்களை, சீராக வெட்டுவதுடன், நகங்களின் ஓரங்களை வெட்டக் கூடாது. அவ்வாறு வெட்டினால், நகம் வளர்வதற்கு தடையாக இருக்கும். 
பிளேடு, கத்தரிக்கோல்
பயன்படுத்தாமல், நகம் வெட்டியை உபயோகப்படுத்துவது நல்லது. கால்களை, சோப்பு அல்லது டெட்டால் கலந்த தண்ணீரில் கழுவலாம். சிலர் வெறும் காலோடு நடப்பர். வெறும் காலோடு நடப்பதால், பாதங்கள் வழியாக நோய்கள் நம் உடம்புக்குள், பரவ அதிக வாய்ப்புள்ளது. செருப்பு போடும் போது, வெயிலைத் தடுக்கும் கிரீமை, கால்களில் தடவ வேண்டும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்போர், வருடத்திற்கு ஒரு முறை, மருத்துவரை அணுகுவது சிறந்தது. இல்லையென்றால், புண் மற்றும் கொப்புளம் ஏற்பட்டு, மிகப்பெரிய நோயை உண்டாக்கும். 
மழைக்காலங்களில் தான், கால்களில், சேற்றுப் புண் அதிகமாக ஏற்படும். ஈரமான செருப்பு மற்றும், ஈரப்பதமான தட்ப வெப்ப நிலை காரணமாக, ஈரமான பாதங்களில் பூஞ்சை பாதிப்பு ஏற்படும். கால் விரல்களின் நடுவில், வெள்ளை நிறங்கள் ஏற்படுவது, உள்ளங்கால் கீறலாகவோ அல்லது கனமாகவோ இருப்பது, நகங்களில் நிறம் மாறுவது போன்றவை இவற்றின் அறிகுறி. 
எப்போதும், பாதங்களை கழுவி, சுத்தமாகவும், ஈரமில்லாமலும் வைத்துக் கொள்ள வேண்டும். பருத்தி சாக்சை பயன்படுத்துவது சிறந்தது. ஒரே ஷூவை தொடர்ந்து போடாமல், மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். ஒரே ஷூவை தொடர்ந்து அணியும் போது, துர்நாற்றம் அடிக்கும். அதை தீர்க்க, நறுமணம் இல்லாத நோய் எதிர்க்கும் சோப்பை பயன்படுத்தி, பாதங்களை கழுவ வேண்டும். பாதங்களை நன்கு காய வைத்தபின், ஷூவை போட வேண்டும். வீட்டிற்குள் நுழைந்தவுடனே, கால்களை கழுவி, நன்கு துடைத்து, டால்கம் பவுடர் போடலாம்.

No comments: