Sunday, November 24, 2013

கண்களை பாதுகாப்பது எப்படி?


தொழில்நுட்ப வளர்ச்சியும், விஞ்ஞானமும் போட்டி போடும் காலம் இது. அந்த வகையில், இந்த நூற்றாண்டின், மிகப் பெரிய கண்டுபிடிப்பு கம்ப்யூட்டர். இன்றைய தினத்தில், மொபைல் போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கைக்கு இணையாக, கம்ப்யூட்டர் பயன்படுத்துவோரும் பெருகி விட்டனர். 
கம்ப்யூட்டரை பயன்படுத்துவது நல்ல விஷயம் தான். ஆனால், அதே நேரத்தில், கம்ப்யூட்டரில் இருந்து வெளிப்படும் கதிர்களிடம் இருந்து, கண்களை பாதுகாத்துக் கொள்வதும் மிக அவசியம். தொடர்ச்சியாக கம்ப்யூட்டரை பயன்படுத்துவோர் சந்திக்கும், முதல் பிரச்னை பார்வைக் கோளாறு.
தலைவலி, மந்தமான பார்வை, ஒளியை காணும் போது கண் கூசுதல், கண் சிகப்பு அடிக்கடி ஏற்படுதல், கண்வலி, கழுத்து மற்றும் பின் முதுகுவலி, நிறங்கள் மங்கலாக தெரிதல், கண் உலர்ந்து காணப்படுதல், அதோடு கண் எரிச்சல் போன்றவை, கண்களுக்குண்டான பிரச்னைகளை உறுதிப்படுத்தும். இந்த பிரச்னைகளுக்கு, "கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்’ என்று பெயர். 
கம்ப்யூட்டர் பயன்படுத்தும், 80 சதவீதம் பேருக்கு இந்த, "கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்’ வர வாய்ப்பு உள்ளது. 
நாம் பார்க்கும் ஒவ்வொரு பொருளின் நிழலும், கண்ணின் பின்புறம் உள்ள, விழித்திரையில் குவிகிறது. கம்ப்யூட்டரில் உள்ள, "பிக்ஸலை’ தொடர்ந்து பார்ப்பதால், இந்த குவிதலில், பிரச்னை ஏற்படுகிறது. கண்ணில் உள்ள ஈரப்பதத்தையும், கண்களுக்குத் தேவையான ஆக்ஸிஜனையும், கண்ணீர் பாதுகாக்கிறது. தொடர்ந்து கம்ப்யூட்டரை பார்ப்பதால், கண் சிமிட்டல் குறைந்து, கண் எரிச்சல் மற்றும் கண்கள் உலர்ந்து போதல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. ஆனால், புத்தகத்தில் உள்ள எழுத்துக்களை பார்க்கும்போது, அதன் தெளிவான தன்மையால், இந்த பிரச்னை வருவதில்லை. 
கம்ப்யூட்டர் பாதிப்பால் ஏற்படும் தலைவலியை, எப்படி தெரிந்து கொள்வது? 
பெரும்பாலும் தலைவலி, தலையின் முன் அல்லது பின்பக்கமாகவும். சில நேரம் ஒரு பக்கத் தலைவலியாகவும் வரலாம். குறிப்பிட்ட நேரம் ஓய்வு எடுத்தால், இது சரியாகி விடும். சிறு வயதிலேயே கம்ப்யூட்டரை உபயோகிக்கும் குழந்தைகளுக்கு, கிட்டப்பார்வை குறைபாடு ஏற்படுகிறது. 
கண்களை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்? 
கம்ப்யூட்டரை, கண் பார்வையில் இருந்து, 20 முதல் 26 இன்சுகள் தள்ளியிருக்கிற மாதிரி, அமைத்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும் கம்ப்யூட்டர்கள் இருக்கும் அறைகள், ஏர் கண்டிஷன் செய்யப்படுவதால், "ஏசி’யில் இருந்து வரும் காற்று, கண்ணுக்கு நேராகபடும்படி உட்காரக் கூடாது. 
கம்ப்யூட்டர் இருக்கும் அறையில், வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக் கொள்வதுடன், "பளீர்’ என்ற வெளிச்சமோ, மங்கலான வெளிச்சமோ இல்லாமல், மிதமான வெளிச்சமாக இருக்க வேண்டும். கம்ப்யூட்டர் பணியின் போது, ஒவ்வொரு, 20 நிமிடத்துக்கு ஒரு முறையும், திரையில் இருந்து, கண்களை அகற்றி, 20 மீட்டர் தொலைவில் உள்ள ஏதாவது ஒரு பொருளை, 20 வினாடிகள் பார்க்க வேண்டும். இப்படி செய்யும்போது, கண்களுக்கு இயல்பான பாதுகாப்பு கிடைக்கும். 
கம்ப்யூட்டரால், கண்கள் உலரும் பாதிப்பு ஏற்பட்டால், கண் டாக்டர் அறிவுரைப்படி, "லூப்ரிகேட்டிங் ட்ராப்ஸ்’ பயன்படுத்தலாம். 
தொடர்ச்சியாக கம்ப்யூட்டர் பயன்படுத்தி, கண் சிமிட்டல் குறைந்து போனவர்கள், அடிக்கடி சிமிட்டலை தொடர வேண்டும். அதோடு, கண்களை மூடி, வட்டச் சுழற்சி முறையில், ஒரு முறை சுழற்றி, மூச்சை ஆழமாக உள்ளிழுத்து, பின், கண்களை திறந்து, மூச்சை மெதுவாக விட வேண்டும். கம்ப்யூட்டர் அத்தியாவசியம் என்றான பின், அதனால், கண்ணுக்கு ஏற்படும் பிரச்னைகளை, இந்த விதத்தில் சரி செய்து கொள்ள முடியும்.

No comments: