Wednesday, October 16, 2013

உடலுக்கு மசாஜ் செய்வதற்கு ஏற்ற சிறந்த எண்ணெய்கள்!!!

உடல் சோர்வாகவும், மிகுந்த வலியுடனும் இருந்தால், அதனைப் போக்குவதற்கு அனைவரும் மேற்கொள்ளும் ஒரு முறை தான் மசாஜ். வாரத்திற்கு ஒரு முறை உடலுக்கு மசாஜ் செய்து குளித்து வந்தால், உடல் வலி குறைவதோடு, உடல் நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும். அதுமட்டுமின்றி, உடலுக்கு ஆயில் மசாஜ் செய்வதால், உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, உடல் ரிலாக்ஸாக இருக்கும். அதிலும் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி ஆயில் மசாஜ் செய்து கொண்டால், இன்னும் சூப்பராக இருக்கும். இவ்வாறு உடலுக்கு ஆயில் மசாஜ் செய்ய பல எண்ணெய்கள் உள்ளன. பெரும்பாலும் அனைவரும் உபயோகிப்பது நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் மட்டும் தான். ஆனால் இவை மட்டுமின்றி, இன்னும் நிறைய எண்ணெய்கள் உடலுக்கு மசாஜ் செய்ய பயன்படுகின்றன. இந்த எண்ணெய்கள் அனைத்தும் உடல் வலியைப் போக்குவதோடு, சருமத்தில் உள்ள பல பிரச்சனைகளைப் போக்க வல்லது. குறிப்பாக ஸ்ட்ரெட்ச் மார்க், சரும வறட்சி, கடினமான சருமம் போன்ற பிரச்சனைகளை, உடலுக்கு மசாஜ் செய்வதன் மூலம் தடுக்கலாம். சரி, இப்போது உடலுக்கு மசாஜ் செய்ய எந்த எண்ணெய்களை பயன்படுத்தலாம் என்று பார்ப்போமா!!! ஆலிவ் ஆயில் கொண்டு மசாஜ் செய்தால், சரும வறட்சி தடைபடுவதோடு, உடல் வலி நன்கு குறையும். அனைத்து வகையான சருமத்திற்கும் சிறந்த எண்ணெய் தான் பாதாம் எண்ணெய். இந்த எண்ணெயால் மசாஜ் செய்தால், உடல் வலி தணிவதோடு, சரும வறட்சி ஏற்படாமலும் இருக்கும். கடுகு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால், களைப்படைந்த தசைகள் நன்கு புத்துணர்ச்சியடைந்து, எலும்புகள் நன்கு வலுப்பெறும். நறுமண எண்ணெய்களான லாவெண்டர் ஆயில், அவகேடோ ஆயில் போன்றவற்றின் மூலம் மசாஜ் செய்தால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, வறட்சியும் தடைப்படும். தேங்காய் எண்ணெயால் உடலுக்கு மசாஜ் செய்தால், சருமம் இறுக்கமடைவதோடு, நல்ல ஈரப்பசையுடன் இருக்கும். மேலும் இது தினமும் பயன்படுத்தக்கூடிய எண்ணெய் என்பதால், இதனை தினமும் உடலுக்கு தேய்த்து வந்தால், சருமம் மென்மையாக இருக்கும். விளக்கெண்ணெய் சருமத்திற்கு மட்டுமின்றி, கூந்தலுக்கும் மிகவும் சிறந்த பலனைத் தரக்கூடியது. நல்ல கெட்டியாக இருக்கும் இந்த எண்ணெய் அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்றது. மேலும் இது முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப்போடும். இந்த எண்ணெயில் நிறைய அழகு நன்மைகள் நிறைந்துள்ளன. மேலும் இது பருக்களைப் போக்கும். ஏனெனில் இதில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை நிறைந்துள்ளது. எனவே பருக்கள் அதிகம் இருப்பவர்கள், இந்த எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால், நல்ல பலன் கிடைக்கும். கிரேப் சீட் எண்ணெயிலும் அழகு நன்மைகள் பல அடங்கியுள்ளன. அதிலும் மென்மையான மற்றும் சுத்தமான சருமம் வேண்டுமென்பவர்கள், இந்த எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யலாம். உடலை மசாஜ் செய்ய வேண்டுமென்றால், அனைவரும் முதலில் தேர்ந்தெடுக்கும் எண்ணெய் தான் நல்லெண்ணெய். நம் முன்னோர்கள் கூட இந்த எண்ணெய் கொண்டு தான் மசாஜ் செய்தார்கள். இந்த எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால், சருமத்தின் நிறம் அதிகரிக்கும். சூரியகாந்தி எண்ணெயை சமையலுக்கு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. இதில் சருமத்திற்கு தேவையான அமிலங்களான லினோலியிக் ஆசிட், பால்மிடிக் ஆசிட் மற்றும் ஸ்டீரிக் ஆசிட் போன்றவை நிறைந்துள்ளது. இவை அனைத்தும் சருமத்தை மென்மையாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவுபவைகளாகும்.

No comments: